Friday, January 24, 2014

மக்பெத் ( ஷேக்ஸ்பியரின் நாடக கதை ) - பாகம் - 2



முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும் .
Story of Shakespeare's Drama - Part 1


Story of Shakespeare's Drama Macbethpart 2


 ஸ்காட்லான்ட் மக்கள் தங்கள் புதிய அரசன் மக்பெதை வரவேற்க மிக பெரும் விழாவிற்கு தயாராகி கொண்டு இருந்தனர். அதை முன்னிட்டு நாட்டின் அனைத்து பிரபுக்கள் மற்றும் அரசவை உறுப்பினர் அனைவருக்கும் ஒரு சிறந்த விருந்தை அரசர் ஏற்பாடு செய்து இருந்தார். அனைவரும் இந்த கோலாகல நிகழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்க, இருவர் உள்ளம் மட்டும் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. ஒருவர் தளபதி பாங்கோ.அரசர் டன்கின் மக்பெதின் விடுதியில் வைத்து கொல்லப்பட்டத்திலும், அவசர அவசரமாக மக்பெத் முடிசூடி கொண்டதிலும் எதோ சதி இருப்பதாக யூகித்து அதை கண்டறிய முற்படுகிறான். 

இன்னும் ஒருவர் அரசி லேடி மக்பெத். அதற்கு காரணம் சூனியக்காரிகளின் மூன்றாவது ஆருடம். மக்பெதின் அரசுக்கு தளபதி பாங்கோ இடையுறாக இருப்பார் என்பதே அதன் உள்ளர்த்தம் என்பதையும், எப்போது வேண்டுமானாலும் பாங்கோ எதிரியாக மாறலாம் என்பதையும் புரிந்து கொண்ட அரசி மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளை யோசிக்க ஆரம்பித்தாள். இந்நிலையில் தளபதி பாங்கோ முன்னாள் அரசரின் சாவை பற்றி விசாரிப்பதை அறிந்து கொண்ட லேடி மக்பெத், அரசரின் துணையுடன் கூலி படையை அனுப்பி தளபதி பாங்கோவை குடும்பத்துடன் கொல்ல சொல்கிறாள். அவர்களும் பாங்கோவை கொன்று விட மகன் ப்ளான்ஸ் தப்பித்து விடுகிறான். 

 விருந்து நாள். கூடி இருந்த பிரபுக்களில் பலர் வீரன் மக்பெத் அரசர் ஆனதை வரவேற்றாலும், அது நிறைவேறிய முறையை பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். தளபதி பாங்கோ மர்மமான முறையில் இறந்ததும் அங்கு மிக ரகசியமாக விவாதிக்க பட்டது. பொதுவாக எல்லோர் மனதிலும் அரசர் மக்பெதின் மீது பயம் கலந்த மரியாதையே இருந்தது. விருந்து நடந்த அரங்கிற்குள் அரசனும் அரசியும் ஆரவாரமாக நுழைந்தனர். மக்பெதின் முகத்தில் தீவிர சிந்தனை ரேகைகள். தளபதி பாங்கோவின் மரணத்தில் தான் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் அவன் மனதை அரித்து கொண்டே இருந்தது. அது தந்த குற்ற உணர்ச்சியால் யாருடனும் அதிகம் பேசாமல் மது கோப்பையை காலி செய்ய தொடங்கி இருந்தான். விருந்து மேடையில் மக்பெதின் இருக்கைக்கு நேர் எதிரில் அமர்ந்திரிந்த உருவம் மங்கலாக தெரிந்ததால் அடையாளம் தெரியவில்லை. கண்களை கசக்கி விட்டு உற்று நோக்க அது பாங்கோ. அவனின் மரணம் காலையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் நிச்சயம் அது அவன் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தான். மனம் மிகவும் கலக்கம் கொண்டிருந்தது. சமாதனப்படுத்தும் நோக்கில் ஆவியுடன் உரையாடத் தொடங்கினான். பாங்கோவின் ஆவி தன் பக்க நியாயங்களை கேள்வியாக கேட்க அதற்கு தன் உளறலான மொழியில் பதிலளிக்கத் தொடங்கினான். விருந்தில் பங்கு கொண்ட ராஜ குடும்பத்தினர்க்கும் பிரபுக்களுக்கும் இந்த நிகழ்வு, அரசன் பெரிய குடிகாரன் மற்றும் பைத்தியக்காரன் என்பதான ஒரு பிம்பத்தையே முன்னிறுத்தியது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தினால் தான் அரசர் இங்ஙனம் நடந்து கொள்கிறார் என அரசி சொன்ன சமதானத்தை அங்கு யாரும் நம்ப தயாராக இல்லை. 


 அந்த விருந்துக்கு பிறகான நாட்களில் மக்பெத் உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தான். இரவில் பாங்கோவின் ஆவியுடன் தனிமையில் பேசுவது வாடிக்கையானது. முன்னாள் அரசர் டன்கின் தூக்கத்தில் கொல்லப்பட்டது முதல் மக்பெதின் தூக்கம் தொலைந்தது. ஸ்காட்லாந்தின் அரசர் மற்றும் மாபெரும் வீரனான மக்பெத், தன் மனசாட்சியுடன் நடத்தும் போரில் கிட்டத்தட்ட தோல்வியை தழுவி கொண்டிருந்தான். அவன் நிம்மதியாக தூங்கி நாட்கள் பலவாயின.


கணவனின் இந்த நிலைமைக்கும், பல அரசியல் கொலைகளுக்கும் காரணமான லேடி மக்பெத் தீவிரமான உள்ளுணர்வு நெருக்கடியால், தன் கைகளில் எப்போதும் இரத்த வாடை அடிப்பதாக புலம்பத் தொடங்கினாள். எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இரத்த வாடை போகவில்லை என அரற்றினாள். அதோடு தூக்கத்தில் நாடாகும் வியாதியும் சேர்ந்து கொள்ள அமைதியின்றி தவித்தாள். தினமும் தூக்கத்தில் நடந்து சென்று யாருக்கோ கடிதம் எழுதி அதை உறையிலிட்டு ஒட்டி தன் அலமாரியில் வைத்துவிடுவது வாடிக்கையானது.

நாட்டில் மக்பெதின் நடவடிக்கைகளை பிடிக்காத சில பிரபுக்கள் ஆங்காங்கே கலகம் செய்ய, வீட்டில் லேடி மக்பெதின் மனோ வியாதி தீர்க்க முடியாததாக இருக்க, பாங்கோவின் மகன் பெலீன்சே மறைந்த மன்னரின் மகன் மால்கமுடன் சேர்ந்து தனக்கு எதிராக படை திரட்டுகிறான் என்ற தகவலும் சேர்ந்து மக்பெதை நிம்மதி இல்லாமல் தவிக்க வைத்தன.

தன் மன அமைதியையும், தைரியத்தையும் முற்றிலும் இழந்த மக்பெத் மீண்டும் தன் எதிர்காலம் பற்றி அறிய அந்த சூனியகாரிகளை சந்திப்பது என முடிவெடுத்தான்.


தொடரும்...


Macbeth - Story of Shakespeare's Drama - Part 3

3 comments:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...